அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்

( ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம் )


திருமண ஸ்தலம் :

108 திவ்ய தேசங்களில், ஸ்ரீ கிருஷ்ணருக்கும், தாயாருக்கும் திருமணமான ஸ்தலம், நான்கு வேதங்களும், ( ரிக், யஜீர், சாம, அதர்வன ) நான்கு தூண்களாக இருக்கும், ஸ்ரீ மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இங்கு தாயார் திருமணக் கோலத்திலேயே இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த திருமணக் கோலத்தை எப்போதும் கண்டு களிக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் வண்டுரூபமாக ( தேனீக்கள் ) தாயார் சன்னதியில், சாலரத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டு, திருமண கோலத்தை தரிசித்து மகிழ்கிறார்கள், இன்றும் நாம் நேரில் தரிசிக்கலாம் ( காணலாம்).

ஸ்ரீ பெருமாளுக்கும் தாயாருக்கும் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் திருமணமான இத்திருத்தலம், திருமணத் தலமாக சிறப்புபெற்றுள்ளது, இங்கு ஸ்ரீ மண்டபத்தில் திருமணம் செய்யும் மணமக்களுக்கு 16 பேறுகளையும் வழங்க, ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் 16 அடி உயரமாக விஸ்வரூப காட்சி தருகிறார்.

இங்கு திருமணம் செய்து பெருமாள், தாயாரின் திருமணக் கோலத்தை தரிசிக்கும் மணமக்களுக்கு, ஸ்ரீ அபிஷேகவல்லி தாயார் ஷமேத ஸ்ரீ பக்தவத்சல பெருமாளின் அனுகிரகமும், முப்பத்து முக்கோடி தேவர்களின் அனுக்கிரகமும் கிடைக்கபெறும்.


பிரார்த்தனை கடவுள் :

திவ்ய தேசமான திருக்கண்ணமங்கையில் அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயிலில் பிரார்த்தனை கடவுளாக ஸ்ரீ பக்ஷி ராஜன் ( கருடாழ்வார்) விளங்குகிறார். திருமணம், குழந்தைப்பேறு, கல்வி, செல்வம், புகழ் வெற்றி, அறிவு, வலிமை, நெல், அழகு, பெருமை, நுகர்சி, இனிமை, துணிவு, நோயின்மை, போன்ற 16 செல்வங்களில் ஏதேனும் தடையிருந்தால் இத்திருக்கோயிலின் பிரார்த்தனை கடவுளான பக்ஷிராஜனை பிரார்த்திப்பதினால் தடை நீங்கி நற்கதி அடைவார்கள்.


ஆலய சிறப்புகள் :

1. வைணவ திருத்தலங்களிலேயே, நின்ற கோலத்தில், மிக உயரமானவராக ( 16 அடி) ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் விளங்குகிறார்.
2. திருமங்கை ஆழ்வாரால் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
3. அபிஷேகவல்லி தாயார் என்றும் திருமண கோலத்திலேயே காட்சி அளிக்கிறார்.
4. முப்பத்து முக்கோடி தேவர்களும் வண்டுரூபத்தில் தாயார் சன்னதியில் திருமணக் கோலத்தை தரிசித்ததப்படியே இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
5. கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம் - மகாவிஷ்ணுக்கும், மகாலெட்சுமிக்கும் திருமண ஆன தலம்.
6. ஸ்ரீ மண்டபம் - நான்கு வேதங்களும், நான்கு தூண்களாக கொண்ட மகாவிஷ்ணுக்கும், மகாலெட்சுமிக்கும் திருமணமான மண்டபம்.
7. தர்சன புஷ்கரணி - பார்த்தாலே முக்தி தரும் திருக்குளம்
8. பஞ்ச கிருஷ்ணஸ்தலம் - திருக்கண்ணங்குடி, திருக்கண்ணப்புரம், திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம்,திருக்கோவலுர்


புஷ்கரணியின் சிறப்பு :

இவ்வாலய திருக்குளத்திற்கு தர்சன புஷ்கரணி என்று பெயர். இத்திருக்குளத்தை பார்த்தாலே பாவங்கள் போகும்.

இத்தீர்த்தம் கங்கையினும் புனிதமானது ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பாதம் பட்டு கால் பெருவிரலால் பள்ளமாகச் செய்து இங்கே நிறுத்தப்பட்டது. இதற்கு விஷ்ணு பாத கங்கை என்ற பெயரும் உண்டு. இந்த புஷ்கரணியில் மூன்று முறை நீராடுபவர்கள் நற்பேறு பெருகிறார்கள்.

இந்த புஷ்கரணி தீர்த்தத்தில் கங்கை, யமுனை, நர்மதை, கௌமுதி, கோதாவரி, கிருஷ்ணவேணி, துங்கபத்ரை, சரஸ்வதி, அஸினி, சதக்நி, கஷீரிணி, வேதவதி, ஸரயு காவேரி, தாம்ரபர்ணி, மஹாநதி, வராகி, ஸிந்து ஆகிய பதினெட்டு தீர்த்தங்களும் சேர்ந்திருப்பதால் இதன் மஹிமை அளவற்றது.

இத்திருக்குளத்தில் மாசிமாதம் ஒரு நாள் தீர்த்தமாடினால் ப்ரயாகையில் தீர்த்தமாடிய பலன் கிடைக்கும்.